உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தபாலில் சேர்ப்பு

examinations.department
examinations.department

இம்முறை நடைபெற்ற கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் தபாலில் சேர்க்கப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை மீள்திருத்தப்பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 17ஆம் திகதியுடன் நிறைவடையவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

இம்முறை உயர் தர பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரையில் 2,678 மத்திய நிலையங்களில் நடைபெற்றது. பரீட்சையில் 337,704 பேர் தோற்றியுள்ளனர். இவர்களுள் 181,126 பேர் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதி பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை விதிமுறைகளை மீறிய 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன. தேசிய மற்றும் வெளிநாட்டு உயர்தர பரீட்சைக்கான பரீட்சை சான்றிதழ்களை எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான doenets.lk மூலம் online சான்றிதளுக்கு விண்ணப்பித்து அதனூடாக 48 மணித்தியால காலப்பகுதிக்குள் சான்றிதழை பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி தொடக்கம் பரீட்சை திணைக்களத்திற்கு விஜயம் செய்து ஒரு நாள் சேவை அல்லது வழமையான சேவையின் மூலம் பரீட்சை சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.