702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு

1633222237 manjal 2
1633222237 manjal 2

கற்பிட்டி, குடாவ கடலோரப் பகுதியில் இருந்து 702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையினர் குறித்த பகுதியில் நேற்று (02) சனிக்கிழமை மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடற்கரையோரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வாகனம் ஒன்றை கடற்படையினர் சோதனை செய்தனர்.

இதன்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 702 கிலோ கிராம நிறையுடைய 20 மூடைகளில் பொதி செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் குறித்த கெப் வாகனத்திற்குள் காணப்பபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இதனை அடுத்து, கெப் வாகனத்தில் காணப்பட்ட 20 உலர்ந்த மஞ்சள் மூடைகளுடன், குறித்த கெப் வாகனத்தை கைப்பற்றிய கடற்படையினர், சந்தேகத்தின் பேரில் ஒருவரையும் கைது செய்தனர்.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளூர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த கெப் வாகனத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு குடாவ பகுதியிலிருந்து மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.