உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் என்னிடம் கூறவில்லை – அலி சப்ரி

NW11
NW11

அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கவில்லை, மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க தம்மை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததாகவும், பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாடி இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி சபையில் தெரிவித்தார்.

அரச பாதுகாப்பில் அவர்கள் உள்ளனர், ஆகவே அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமாக நாம் சகலரும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சிறைக்கைதிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு, நலன்கள் குறித்து எதிர்கட்சியினர் கொண்டு வந்திருந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் கருத்துக்களை முன்வைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் எம்.பி அனுராதபுரம் சிறைக்கைதிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார், அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும், சட்டத்தரணிகளுக்கு அவர்களை சந்திக்க வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும், சிறைக் கைதிகளை யாழ்ப்பாணம் சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற காரணிகளை வலியுறுத்தினார்.

இதற்கு பதில் தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி :- அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் கைதிகளுக்கு ஏற்பட்ட குற்றம் தொடர்பில் சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, இராஜாங்க அமைச்சர் மூலமாக இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்தி உரிய அதிகாரிகளுக்கு வழங்குவதே எமது அமைச்சின் மூலமாக முன்னெடுக்கும் வேலைத்திட்டமாகும்.

குற்றம் தொடர்பில் காவல்துறையினர் வேறு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இன்றும் என்னுடன் இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். ஆகவே இந்த விடயத்தில் நான் தலையிட நினைக்கவில்லை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று குறித்த கைதிகளுடன் நான் கலந்துரையாடினேன். அதன்போது தாம் யாழ்ப்பணத்திற்கு செல்ல வேண்டும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

ஆனால் அவர்களின் கிராமங்கள் அண்மையில் உள்ள காரணத்தினால் நாங்கள் அங்கு செல்ல விரும்புகின்றோம், எமது உறவினர்களுடன் கதைக்க அவர்களை சந்திக்க எமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற காரணத்தையே அவர்கள் என்னிடம் கூறினர். மாறாக உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. நான் மீண்டும் மீண்டும் தமிழ் மொழியில் அவர்களுடன் கலந்துரையாடினேன். எனினும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் என்னிடம் கூறவில்லை. எவ்வாறு இருப்பினும் அவர்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த நாம் தயாராக உள்ளோம்.,

உயர் நீதிமன்றமும் அதனையே சுட்டிக்காட்டியுள்ளது. அரச பாதுகாப்பில் அவர்கள் உள்ளனர், ஆகவே அவர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமாக நாம் சகலரும் பொறுப்புக்கூற வேண்டும். எவ்வாறு இருப்பினும் யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதென்றால் பாதுகாப்பு தரப்புடன் கலந்துரையாட வேண்டும், அவர்களை கொழும்பு அல்லது தும்பர சிறைக்கு மாற்ற விருப்பம் கேட்டேன், ஆனால் அவர்கள் அதற்கு விரும்பவில்லை. எவ்வாறு இருப்பினும் மீண்டும் இவர்கள் குறித்து கவனம் செலுத்துவேன் என்றார்.