முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நவராத்திரி பூஜை ஆரம்பம்!

FB IMG 1633628496703
FB IMG 1633628496703

ஒவ்வொரு வருடமும் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் முக்கியமான விரதங்களில் ஒன்றான நவராத்திரி விரதம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று(07) காலை நவதானிய பூரண கும்பம் வைத்தலுடன் பக்தி பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் கொரோனா அசாதாரண சூழ்நிலை காரணமாக கிளைரீதியான உத்தியோகத்தர்கள் மட்டும் கலந்துகொள்ளக்கூடியதாக முறையான சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக அனுஸ்டிக்கப்படவுள்ளது.

அதனடிப்படையில் இன்றைய முதல்நாள் பூஜை வழிபாடுகளை தாபனக் கிளையினரால் நடாத்தப்பட்டது.

இதன்போது மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவிலை, தோரணங்கள், வாழை மரங்கள் என்பவற்றால் வழிபாட்டிடம் மங்களகரமான முறையில் அலங்கரிக்கப்பட்டு வீரத்திற்கு அதிபதியான துர்க்கை, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் எழுந்தருளச் செய்யப்பட்டு நவதானிய பூரண கும்பம் வைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

குறித்த பூஜை வழிபாட்டில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன், மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.சு.விக்கினேஸ்வரன் மற்றும் உத்தியோகத்தர்கள் பக்திபூர்வமாகக் கலந்து கொண்டிருந்தனர்.

இதே போன்று ஏனைய எட்டுநாட் பூஜைகளை ஏனைய ஒவ்வொரு கிளையினரும், இறுதிநாட் பூஜை ஊழியர் நலன்புரி சங்கத்தினரின் ஏற்பாட்டிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.