20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசிகளை வழங்க தீர்மானம்

பைசர்
பைசர்

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கட்டமாக பைசர் தடுப்பூசி வழங்கப்படும். இதன் போது நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

உயர்தர மாணவர்களுக்கு வழங்குவதற்கு தேவையான ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அதே வேளை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 10 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இது தவிர மேலும் 17 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கிடைக்கப் பெறும்.

தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் பைசர் தயாரிப்பு நிறுவனத்திற்குமிடையில் எட்டப்பட்ட உடன்பாட்டுக்கமைய மேலும் 14.5 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி தொகையானது நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் செயலூட்டியாக வழங்குவதற்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறு கிடைக்கப் பெறும் பைசர் தடுப்பூசிகளை வழங்கும் போது நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கும் , சுகாதார ஊழியர்களுக்கும் முன்னுரிமையளிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதேவேளை 18 – 19 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் பணிகள் முதற்கட்டமாக எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளில் ஆரம்பமாகும் என்று சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷாமன் ரஜிந்திரஜித் தெரிவித்தார்.

இதன் தொடர் செயற்பாடுகள் அடுத்தடுத்த வாரங்களில் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் , பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் , வைத்தியசாலைகளிலும் இடம்பெறும் என்றும் பேராசிரியர் ஷாமன் ரஜிந்திரஜித் மேலும் தெரிவித்தார்.