1,154 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்பு!

1633787256 termaric 02
1633787256 termaric 02

சிலாபம் கருக்குப்பண்ண களப்பு பகுதியில் இருந்து 1,154 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படையினர் குறித்த களப்பு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று (08) மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே 37 உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட 1,154 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சள், உள்ளூர் பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லும் நோக்கில் குறித்த காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய கொரோனா தொற்று நீக்கி தெளிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக தமது பொறுப்பில் தடுத்து வைத்திருப்பதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது இதுவரை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 11,636 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை பறிமுதல் செய்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.