மரண தண்டனையை சவாலுக்குட்படுத்திய வாஸ் குணவர்தனவின் மேன் முறையீட்டு விசாரணைக்கு திகதி குறிப்பு!

download 23
download 23

கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சியாம் படுகொலை விவகாரத்தில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் வாஸ் குணவர்தன அவர் மகன் ரவிந்து வாஸ் குணவர்தன உள்ளிட்ட குற்றவாளிகளின் மேன்முறையீடுகளை ஒவ்வொரு நாளும் விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று திகதி குறித்தது. அதன்படி எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல்  தொடர்ச்சியாக விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.  

தனக்கு எதிராக ட்ரயல் அட்பார் நீதிமன்றம் ஊடாக வழங்கப்பட்ட மரண தண்டனையை நீக்குமாறு கோரி வாஸ் குணவர்தன, அவரது மகன் ரவிந்து வாஸ் குணவர்தன, உப காவல்துறை பரிசோதகர் இந்திக பமுனுசிங்க, காண்ஸ்டபிள்களாக இருந்த காமினி சரத் சந்ர,பிரியங்க சஞ்ஜீவ, கெலும் ரங்க ஆகிய   குற்றவாளிகள் தக்கல் செய்த மேன் முறையீடு இன்று விசாரணைக்கு வந்த போதே உயர் நீதிமன்றம் இந்த திகதிக் குறிப்பை இட்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, ப்ரீத்தி பத்மன் சுரசேன, காமினி அமரசேகர மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாமே இந்த  விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக இன்று அறிவித்தது.

ஏற்கனவே இந்த மேன் முறையீடு தொடர்பில்  வாதங்கள் நிறைவடைந்த நிலையில், அப்போது நீதியரசர்கள் குழாமிலிருந்த நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன மரணமடைந்த நிலையில், நீதியரசர் சிசிர டி ஆப்றூ ஓய்வுபெற்றார். இவ்வாறான நிலையிலேயே மீள வாதங்களை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, அனில் சில்வா, அனுஜ பிரேமரத்ன ஆகியோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான தர்ஷன குருப்பு மற்றும் அசித்த விபுலநாயக்கவும் ஆஜராகின்றனர்.

அத்துடன் இவ்வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால்  ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன ஆஜராகிறார்.