இந்தியாவுக்கு அடிபணிந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டியதன் அவசியம் என்ன? – ஹர்ஷன ராஜகருணா

harshana
harshana

அரசாங்கம் மிகவேகமாக மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றது. அரசாங்கத்தின் மீது நாட்டுமக்கள் வெகுவாக அதிருப்தியடைந்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அடிபணிந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டியதன் அவசியம் என்ன?

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பூர்த்தியடையும்வரை ஏன் மாகாணசபைத் தேர்தல்களை நடத்தாமல் இருக்கமுடியாது? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வி எழுப்பியுள்ளார்.

‘எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் தேவைக்கேற்ப அதனைச்செய்யமுடியாது.

இந்தியா, சீனா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் கட்டமைப்புக்களின் தேவைகளுக்கு அமைவாக உள்ளக விடயங்களை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.