நீதிமன்றில் முன்னிலையான ஷானி அபேசேகரவுக்கு எதிர்ப்பு!

1596808911 Shani 2
1596808911 Shani 2

போலி சாட்சியை உருவாக்கி நீதிமன்றத்தை அவமதித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டு தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 3 பேருக்கு எதிரான வழக்கு இன்று (18) கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சந்தேகத்துக்குரியவர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கு விசாரணையின்போது, நீதிமன்ற வளாகத்திற்கு பிரவேசித்த ஒருவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

இதன்போது தம்மை ஞாபகம் இருக்கின்றதா? என ஷானி அபேசகரவிடம் வினவிய குறித்த நபர் மலேசியாவிலிருந்து அரசின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தம்மை நாட்டுக்கு அழைத்து வந்தமையை நினைவு கூர்ந்தார்.

அத்துடன் தம்மை நாட்டுக்கு அழைத்து வந்ததன் பின்னர் 14 நாட்கள் தடுத்து வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகக் கருத்துக்களை வெளியிடுமாறு தாம் அறிவுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைத்து வருமாறு தெரிவித்தார்.

ஆனால் இன்று தாம் வெளியே இருக்கின்ற போதிலும் அவர் நீதிமன்றத்தில் மறைந்து செல்கின்றார்.

இதனையே முன்வினையெனக் கூறுகின்றனர்.

லக்ஷ்மன் ஆரச்சி எனும் நான், மலேசியாவில் தொழில் புரிந்த நிலையில் தேசிய கீதத்தைத் தமிழ் மொழியில் பாடுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன்.

பின்னர் அவர்கள் தமக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததோடு நீதிமன்றில் கடும் பிடியாணையை பெற்றிருந்தனர்.

இதனையடுத்து மலேசியாவுக்கு வந்திருந்த அவர்கள் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி அங்கு 7 நாட்கள் தங்கியிருந்து என்னை கைது செய்திருந்தனர்.

தம்மை இலங்கைக்கு அழைத்து வந்ததோடு 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் போலி கடவுச்சீட்டினை பயன்படுத்தியே தம்மை நாட்டுக்கு அழைத்து வந்ததாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

தமக்கு உரிய கடவுச்சீட்டு காணப்பட்ட போதிலும் தமது முகநூல் கணக்கில் காணப்பட்ட படத்தினை பயன்படுத்தி போலி கடவுச்சீட்டு தயாரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் அவர்களுக்கு எதிராக தாம் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்ததாகவும் எனினும் அதற்கான உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.