அதிகாரிகள் எதேச்சதிகாரத்துடன் செயல்படுகின்றனர் – ஆசிரியர் சங்கம்

teachers
teachers

வவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தெரிவித்துள்ளது. இலங்கை  ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் மற்றும் செயலாளரினால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்க்குமாறு கோரி 90 நாட்கள் கடந்து சென்ற ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இம்மாதம் 21, 22 ஆகிய இரு தினங்கள் அடையாள பணிப் புறக்கணிப்பாக மாற்றம் பெற்றிருந்தது. இப் பணிப் புறக்கணிப்பு தொடர்பில் முன்கூட்டியே சம்மந்தப்பட்டவர்களிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தில், வவுனியா கோட்டத்தின் சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருந்த நிலையில் அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்லவில்லை.

வவுனியா தெற்கு வலயக்கல்லிப் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைய வவுனியா கோட்டக்கல்விப் பணிப்பாளர், வவுனியா கோட்டப்பாடசாலை அதிபர்களிடமிருந்து தொலைபேசி மூலமாக பாடசாலை திறப்புக்களை கோட்டக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கோரியிருந்தார். அதிபர்களிடமிருந்து அலுவலக திறப்புக்களை கோரும் போது பல்வேறு நிர்வாக ரீதியான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியது அவசியமானது. எழுத்து மூலமான ஆவணங்கள் பரிமாறப்படாமல் வாய்மொழி மூலம் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அதிபர்களிடமிருந்து பாடசாலை திறப்புக்களை கோரும் செயற்பாடானது, அவர்கள் இருவரினதும் நிர்வாக ரீதியான எதேச்சதிகாரப் போக்கினை வெளிப்படுத்துகின்றது.
கல்விப் புலத்தில் இவ்வாறான சட்டரீதியற்ற செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாமென கோருவதுடன், மேற்படி செயற்பாட்டினை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.