முல்லைத்தீவில் போக்குவரத்து வசதிகள் இல்லாத பாடசாலைகள் : ஆசிரியர்கள், மாணவர்கள் சிரமம்!

IMG 9710
IMG 9710

முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தின் கீழுள்ள உள்ள 61 பாடசாலைகளில் 14 பாடசாலைகளைத் தவிர ஏனைய 47 பாடசாலைகளும் போக்குவரத்து வசதிகள் இல்லாத மிகவும் பின்தங்கிய பாடசாலைகளாக காணப்படுகின்றன.

இதனால் குறித்த பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 14 பாடசாலைகள் மாத்திரமே ஓரளவு போக்குவரத்து வசதி கொண்ட பாடசாலைகளாக காணப்படுகின்றன.

ஏனைய 47 பாடசாலைகளும் எந்தவித போக்குவரத்து வசதிகள் இல்லாமலும், பயணம் முடியாத பாதைகளாகவும் காணப்படுகின்றன.

இதனால் குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற மாணவர்களும் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு செல்லுகின்ற ஆசிரியர்களும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.

குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று முறிப்பு, பனங்காமம், சிறறாட்டிகுளம், பொன்நகர், அம்பாள்புரம், கொள்ள விளாங்குளம், விநாயகபுரம் ஆகிய பாடசாலைகளும், துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோட்டை கட்டிய குளம், பாடசாலை தென்னியன் குளம், பாடசாலை உயிலங்குளம், பாடசாலை புத்துவெட்டுவான் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளும் இவ்வாறு எந்தவித போக்குவரத்து வசதிகளும் இன்றி காணப்படுகின்றது.

இதேபோல் ஒட்டுசுட்டான் கல்விக் கோட்டத்தில் உள்ள பெருமளவான பாடசாலைகளும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது. இதனால் அன்றாடம் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக செல்லுகின்ற ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்பாக மேற்படி பாடசாலைகளில் ஆசிரியர்கள் தங்கியிருந்து கற்பிக்கக் கூடிய எந்த வசதிகளும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.

இதைவிட பிரதேசங்களிலேயே வாழுகின்ற மக்களில் 70 வீதமான மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கூலித் தொழிலாளிகளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.