தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

1635615639 teduru 2
1635615639 teduru 2

நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் நீரின் அளவு அதிகரித்துள்ளமையால் இவ்வாறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நான்கு வான் கதவுகளும் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதுடன், செக்கனுக்கு 5,600 கன அடி வேகத்தில் நீர் வெளியேற்றப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய கடமை நேர அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு, தெதுரு ஓயா வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால், தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அண்டிய தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் அந்த அதிகாரி கூறினார்.

மேலும், தொடர்ச்சியாக மழை பெய்தால் தெதுரு ஓயாவின் மேலதிக வான் கதவுகளும் திறக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள போதிலும், இதுவரை எவரும் இடம்பெயரவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி மேலும் கூறினார்.