இஸ்லாமிய திருமணம் தொடர்பான இறுதி சட்ட வரைபு இரு வாரங்களில் அமைச்சரவைக்கு!

muslim wedding tradition thumb
muslim wedding tradition thumb

இஸ்லாமிய திருமண – விவாகரத்து சட்டத்திருத்தம், காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தை ரத்து செய்தல் உள்ளிட்டவை தொடர்பான இறுதி சட்ட வரைபு எதிர்வரும் 2 வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.

நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை தெரிவித்தார்.

முதலாவது சட்ட வரைபு தொடர்பில் முன்வைக்கப்பட்ட திருத்தங்களை ஆராய்ந்து புதிய சட்ட வரைபு தயாரிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

திருமண வயதெல்லையை 18 ஆக மாற்றுதல், திருமணத்தைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குதல் மற்றும் அதற்குப் பெண்களின் கையொப்பத்தினையும் பெற்றுக் கொள்ளுதல், காதி முறைமையை இல்லாது செய்தல், சிறுவயது திருமணத்தைத் தடுத்தல், காதிகளாகப் பெண்களையும் நியமிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல் உள்ளிட்ட யோசனைகள் அதில் அடங்குகின்றன.

இஸ்லாமிய திருமண சட்டத்திருத்தத்திற்கு அமையக் காதி முறைமை மற்றும் சிறுவயது திருமணத்தைத் தடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கலாக முன்னர் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

நீதியமைச்சர் அலி சப்ரியுடன் தொலைக்காணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.