வீட்டுத்தோட்ட வாரத்தினை முன்னிட்டு மரக்கறி விதைப்பொதிகள் கையளிப்பு!

FB IMG 1635767599261
FB IMG 1635767599261

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக நிலையான வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டம் 2021இன் கீழ் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் ஏழாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சௌபாக்கியா வீட்டுத்தோட்ட வாரத்தினை முன்னிட்டு மரக்கறி விதைப்பொதிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று(01) காலை 10.00 மணியளவில் முள்ளியவளை கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத்தோட்டம் எனும் தொனிப்பொருளில் விவசாய அமைச்சினால் செயற்படுத்தப்படும் தேசிய வேலைத்திட்டம் இதனூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினூடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 000 பயனாளிகள் நன்மையடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இதன்போது முள்ளியவளை கமநல சேவைகள் பிரிவினை சேர்ந்த பயனாளிகளுக்கான வீட்டுத்தோட்டத்திற்கான பயிர்விதைப்பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் சியாப் திட்ட பயனாளிகளுக்கான பயறு மற்றும் கௌப்பி வழங்குதல், யானை வேலி அமைத்தல், தரிசு நில பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு தொகை, நெற்செய்கைக்கான ஊக்குவிப்புக்கான பணத்தொகையும் போன்றனவும் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எம்.உமாமகள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் இ.பரணிகரன், கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபை உதவிப் பணிப்பாளர் ஆ.கமன்லீசன், விவசாய போதனாசிரியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.