பெண்களிடம் தங்கச்சங்கிலிகளை அபகாித்துவந்த இருவர் சிக்கினர்!

chain
chain

அத்துருகிரிய மிரிஹான, முல்லேரியா மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பிரதேசங்களில் உந்துருளிகளில் சஞ்சரித்து, பெண்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை அபகாித்துசென்ற இருவர் மீகொட, படவல பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவருக்கு எதிராக நுகேகொடை நீதிமன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பாதுக்க படல்கம பிரதேசத்தைச் சேர்ந்த 32, 41 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுடன் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் கொள்ளைக்காகப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த மாதத்தினுள் இந்தச் சந்தேகநபர்கள் இருவரும், வீதியில் பயணிக்கும் பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அகபரித்து சென்றிருந்த நிலையில், இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும்  கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட உந்துருளியில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடுகள் போலியானவை என்றும், முல்லேரியா மற்றும் பொரலஸ்கமுவ காவல்துறையினரினால், இதற்கு முன்னர் இச்சந்தேகநபர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 15 ஆம் திகதி மிரிஹான, தர்மரத்ன வீதியில் பயணித்த பெண்ணொருவரை தரையில் தள்ளி அவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச்சென்ற காட்சி அருகில் உள்ள சிசிடீவி காணொளியில் பதிவாகியிருந்த நிலையில், அதனூடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.