புதிய வகை கொவிட் வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவக்கூடுமென எச்சாிக்கை!

upul rohana
upul rohana

பல நாடுகளில் தற்போது புதிய கொவிட் வைரஸ் திரிபு ஒன்று பரவிவரும் நிலையில், அது இலங்கையினுள் பரவுவதனை தடுக்கும் வகையில் பொதுமக்கள் செயற்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இந்த திரிபானது தற்போது பயன்படுத்தப்படும் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினாலும் கட்டுப்படுத்த முடியாததொன்றெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், குறித்த கொவிட் திரிபு நாட்டுக்குள் நுழைந்தால் நாடு மீண்டும் மோசமான நிலைக்குத் தள்ளப்படும். இந்த திரிபானது இலங்கையினுள் நுழையாது என்று நம்பிக்கை கொள்ள முடியாது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து கொவிட் திரிபுகளும், மிகவும் குறுகிய காலத்தில் இலங்கையினுள் பரவ ஆரம்பித்திருந்தன.

தற்போது பொதுமக்களில் சிலர் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடிக்கும் நிலைமை குறைவடைந்து வருவதால் எதிர்காலத்தில் இந்த வைரஸ் திரிபு நாட்டுக்குள் நுழையுமாயின், அது எளிதில் பரவலடையக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறாக சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது மாத்திரமே இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாம் செய்யவேண்டிய அல்லது செய்யக்கூடிய ஒரேயொரு பாதுகாப்பு முறையாகும்.

ஏனெனில், பூரணமாக கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள்கூட இந்தத் தொற்றுக்கு உள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புதிய வைரஸ் திரிபுக்கு எதிராகச் செயற்படக்கூடிய ஆற்றல் தற்போது பயன்பாட்டிலுள்ள கொவிட் தடுப்பூசிகளுக்கு இல்லாத காரணத்தினால் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதொன்றே இந்த அபாயகர தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரேயொரு வழியாகும் என்று உபுல் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்.