மின்சார விநியோகத்தடை ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் இடமில்லை!

Current 3 850x460 acf cropped
Current 3 850x460 acf cropped

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நாளையும் நாளை மறுதினமும் மின்சார விநியோகத்தடையோ அல்லது மின்சாரத் தடையை சீர்செய்யும் பணிகளைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளோ இடம்பெறமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அதன் தலைவர் எம்.எம்.சி. பர்டினேன்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை தொழிற்சங்கங்கள் இதுபோன்றதொரு நிலைமை தொடர்பில் தங்களுக்கு அறியப்படுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகளை இரத்துச் செய்வதாக மின்சார சபை அதிகாரிகள், நேற்றிரவு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மின்சாரத்துறை, அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்படவில்லை.

இந்நிலையில், நாடுமுழுவதுமுள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்புக்கு வந்து, இலங்கை மின்சார சபை காரியாலயத்திற்கு முன்னாள் நாளை(03) மதியம் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்க வேண்டாம் என தீர்மானித்துள்ளோம்.

நாட்டு மக்களுக்கு மின்சார விநியோகம் எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படும் அதேவேளை தாங்கள் கொழும்புக்கு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய மின்சாரத்தடை சீரமைப்பு பணிகள் இடம்பெறும்.

எனினும், மிகப்பெரிய மின்சார விநியோகத்தடை இடம்பெறுமாயின், அதனை வழமைக்கு கொண்டுவர முடியாத நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், துறைமுக மற்றும் கனியவள கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளைய தினம் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிலையில், மின்சார விநியோகத்தடை ஏற்படுவதற்கு எவ்விதத்திலும் இடமில்லையென இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பர்டினேன்டோ தெரிவித்துள்ளார்.