மூன்று கொவிட் தடுப்பூசிகளின் செயற்திறன் காலம் குறைவடைவதாக ஆய்வில் தகவல்

71d94977 5a5e5e9a bd7c3924 channa jayasumana 850x460 acf cropped 850x460 acf cropped
channa jayasumana

கொவிட்-19 பரவல் தொடர்பான உலகின் போக்குகள் குறித்த ஆய்வுகளின்படி, எதிர்வரும் டிசம்பர் மாதம் கொவிட் தொற்று ஒப்பீட்டளவில் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்பூசி தொடர்பில் அமெரிக்கா நடத்திய புதிய ஆய்வு தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பெருவாரியாக பயன்படுத்தப்படும் மூன்று கொவிட் தடுப்பூசிகளினதும் செயற்திறன் காலம், கணிசமான அளவில் குறைவடைவதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

8 இலட்சம் அமெரிக்கர்களிடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பைஸர், மொடெர்னா மற்றும் ஜொன்சன் எண்ட் ஜொன்சன் முதலான கொவிட் தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, பைஸர் தடுப்பூசியின் செயற்திறன், கடந்த மார்ச் மாதம் 89.2 சதவீதத்திலிருந்து, 6 மாதங்களின் பின்னர், 58 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மொடெர்னா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த காலப்பகுதியில், 86.9 சதவீதத்திலிருந்து, 43 சதவீதம் வரையில் குறைவடைந்துள்ளது.

ஜொன்சன் எண்ட் ஜொன்சன் தடுப்பூசியின் செயல்திறன் 86.4 சதவீதத்திலிருந்து, 13 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன, தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு குறைவடைவதாக கூறுவது நல்ல விடயமல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையிலும், பைஸர் மற்றும் மொடெர்னா தடுப்பூசிகள் பெருமளவில் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், மூன்றாம் தடுப்பூசியை வழங்குவதையும், முகக்கவசத்தை அணிவதையும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆகும்போது நிலைமை சிறந்ததாக அமையாது என்றே இந்த ஆய்வில் தெரிவிக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கூறியுள்ளார்.