மலையகத்தில் அதிகளவான மதுபானசாலைகளுக்கு அனுமதி? நிதி இராஜாங்க அமைச்சர் விளக்கம்

sekan
sekan

மலையகத்தில் அதிகளவான மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக இதுவரையில் முறைப்பாடு எதுவும் கிடைக்கப்பெறவில்லையென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மலையக பெருந்தோட்ட பகுதியை மாத்திரம் மையப்படுத்தி மதுபானசாலைகளுக்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அதிகளவான மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றில் இன்று (08) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுமாயின் மதுவரித்திணைக்கள ஆணையாளருக்கு நடவடிக்கை எடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும் தற்போதைய ஆட்சிக் காலத்தில் குறித்த மதுபானசாலைகள் திறக்கப்படவில்லை.

அத்துடன் சட்டவிரோத மதுபானசாலைகள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர விசேட அவதானத்தைச் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஏனைய சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.