மக்களை சூறையாடவே பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியுள்ளது – முஜிபுர் ரஹ்மான்

image 2021 11 11 211817
image 2021 11 11 211817

பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கி அரசாங்கம் மக்களை சூறையாடுவதற்கு வியாபாரிகளுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கி இருக்கின்றது.

அதேபோன்று லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் 10ஆயிரம் கோடி ரூபா மோசடி இடம்பெற்றுள்ளது. அது அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்படும் செய்தியின் உண்மை என்ன என்பதை அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற ஒதுக்கீடு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் பூரணமாக நீக்கி இருக்கின்றது. கொவிட் காரணமாக பொருளாதார ரீதியில் மக்கள் மிகவும் கஷ்டத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தொழிற்சாலைகளில் முழுமையான சம்பளம் அதிகமானவர்களுக்கு கிடைப்பதில்லை. இலட்சக்கணக்கான மக்கள் தொழில் இல்லாமல் இருக்கின்றனர்.

அதனால் மக்கள் அரசாங்கத்திடம் நிவாரணத்தை எதிர்ப்பார்த்து இருக்கின்றனர். ஆனால் பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை இல்லாமலாக்கி பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சூரையாடுவதற்கு அரசாங்கம் வியாபாரிகளுக்கு பூரண சுதந்திரம் வழங்கி இருக்கின்றது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை காரணமாக அரிசி, சீனி உட்பட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் அரசாங்கம் தெரிவித்த விலைக்கு பெற்றுக்கொள்ள எங்கும் இல்லை.

அனைத்து பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. ஆனால் இன்று கட்டுப்பாட்டு விலைக்கு இருப்பது அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனை மாத்திரமாகும். அதுவும் எந்த நேரத்தில் இல்லாமலாக்கப்படுமோ தெரியாது.

மேலும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் 10ஆயிரம் கோடி மோசடி இடம்பெற்றுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் தலைவர் மீதே அவர் இந்த குற்றச்சாட்டை தெரிவிக்கின்றார்.

முன்னாள் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டு இருப்பதாக தெரிவித்து அவரை நீக்கிவிட்டு ஜனாதிபதி புதிய தலைவரை லிட்ரோ நிறுவனத்துக்கு நியமித்துள்ளார்.

முன்னாள் தலைவரை நியமித்தது அமைச்சர் பஷில் ராஜபக்ஷ்வாகும். இந்த நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் மோசடி என்னவென்றால், இலங்கைக்கு கேஸ் கொண்டுவர ஓடிஐ நிறுவனத்துக்கு ஒருவருடத்துக்கே ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.

ஆனால் முன்னாள் தலைவர் அந்த நிறுவனத்துடன் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கின்றார். அதனால் 10ஆயிரம் கோடி ரூபா மோசடி இடம்பெற்றிருப்பதாகவே தெரிவிக்கின்றார்.

அத்துடன் லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தனது விருப்பத்துக்கு ஒப்பந்தங்களை செய்வதில்லை. அமைச்சரின் அனுமதியுடனே இதனை செய்யவேண்டும்.

அப்படியானால் லிட்ரோ நிறுவனத்தில் இடம்பெற்றிருக்கும் 10ஆயிரம் கோடி ரூபா மோசடி அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கே சென்றிருக்கவேண்டும். அந்தப் பணம் யாருக்கு சென்றது? என்ற தகவல்களை தெரிவிக்க தான் அச்சப்படுவதில்லை என தற்போதைய தலைவர் தெரிவித்திருக்கின்றார்.

அப்படியாயின் இதுதொடர்பில் உண்மை நிலையை கண்டறிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதேபோன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்கு செல்பவர்களுக்கு விமான நிலையத்தில் 2 பிசிஆர் பரிசோதனைகளை செய்து அவர்களிடமிருந்து 15ஆயிரம் ரூபா பெறப்படுகின்றது. இது பாரிய அநியாயமாகும். இரண்டு பிசிஆர் பரிசோதனைகள் எதற்காக செய்யவேண்டும்? என கேட்கின்றேன்.

அதேபோன்று விமான நிலையத்தில் இரண்டு பரிசோதனை நிலையங்கள் இருக்கும் நிலையில் விமான நிலையத்தின் வாகன தரிப்பிடத்திலும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டு பிசிஆர்பரிசோதைனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கின்றது என்றார்.