மேல் மாகாணத்தில் 2 மணிநேர விசேட சோதனை – 360 பேருந்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை

image f84cd1b8c2
image f84cd1b8c2

மேல் மாகாணத்தில் நேற்று (13) இரண்டு மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாத பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் 360 பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் 480 வர்த்தக நிலையங்களுக்குக் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் காவல்துறையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல்மாகாணத்தில் பொதுமக்கள் முறையான சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுகிறார்களா என்பதை பரிசோதிப்பதற்காக இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 476 காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

பேருந்துகளின் இருக்கைக்கு அப்பால் பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக்கவசம் அணியாமை, குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்குள் நடமாடும் வர்த்தகர்கள் நுழைதல் போன்ற விடயங்களைக் கண்டறிவதற்காக இந்த விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 895 பேருந்துகள், 181 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் மற்றும் 1232 சில்லறை மருந்தகங்கள் மற்றும் சிறிய வர்த்தக நிலையங்கள் என்பனவற்றில் மேற்படி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.