உயர் வணிக பெறுமதியான காணிகள், கட்டிடங்களை குத்தகைக்கு வழங்க நடவடிக்கை!

கொழும்பிலும், வெளி மாவட்டங்களிலும் உள்ள உயர் வணிக பெறுமதியான காணிகள் மற்றும் கட்டிடங்கள் பலவற்றை முதலீட்டாளர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்க நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

46 வேலைத்திட்டங்களுக்காக குறித்த காணிகள் மற்றும் கட்டிடங்கள் இவ்வாறு குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளதுடன், அரச மற்றும் தனியார்த்துறைகள் இணைந்து அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு, குறித்த காணிகள் மற்றும் கட்டிடங்களை 30,50 மற்றும் 99 வருடங்களுக்கு வழங்க எதிர்ப்பார்ப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தெரிவித்தார்.

வீட்டுத்திட்டங்கள், வர்த்தக நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், விருந்தகம், பொழுது போக்கு இடங்கள் மற்றும் கலப்புத்திட்டங்கள் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் குறித்த வேலைத்திட்டத்தை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி பாதீட்டை முன்வைத்து உரையாற்றுகையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாட்டிற்கு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.