கிறிஸ்தவ ஆயர்களுக்கு அகில இலங்கை இந்து சம்மேளனம் கடுமையான கண்டனம்!

IMG 20211115 WA0052
IMG 20211115 WA0052

கிறிஸ்தவ ஆயர்களுக்கு அகில இலங்கை இந்து சம்மேளனம் கடுமையான கண்டனங்களை பதிவுசெய்கின்றது.
-போரில் இறந்த தமிழர் நினைவுநாளை மாற்ற கிறிஸ்தவ இன ஆயர்களுக்கு என்ன தேவை என அகில இலங்கை இந்து சம்மேளனம் தேசிய ஆலோசகர் செல்லையா இராசையா கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் அவரது அறிக்கையில்….

இலங்கையில் இன்னும் ஒரு உள்நாட்டு யுத்தம் நிகழக்கூடாது என்பதே இலங்கையர்களாய் வாழும், இலங்கைத் தமிழர்களின் உறுதியான நிலைப்பாடாகும். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழர்கள் தம் வாழ்விடங்களையும் வாழ்வியல் அடையாளங்களையும் இழந்த நிலையில் வாழ, அச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழர்களை இனவழிப்பு செய்வதையும், இனமாற்றம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு நயவஞ்சகத்துடன் செயற்பட்டது ஆபிரகாமிய இனத்தவர்களின் கடந்தகால வரலாறாகும்.

வரலாறு இவ்வாறிருக்க இலங்கையின் அமைதியை விரும்பாத கிறிஸ்தவ இன ஆயர்கள் சிலர் போரில் இறந்தவர்களை நினைவுகூர்வது தொடர்பில்  வெளியிடப்பட்ட அறிக்கையானது தமிழர்களாகிய எமக்குக் கடும் சினத்தினையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக தமிழர்களின் மரபையும், பாரம்பரியத்தையும் அழிப்பதையே முழுமையான நிகழ்ச்சி நிரலாகக் கொண்டியங்கும் கிறிஸ்தவ ஆயர்கள், போரில் இறந்த தமிழர்களை அனுஷ்டித்து நீண்ட காலமாக பின்பற்றிவரும் தினத்தை தன்னிச்சையாக மாற்றி தம்மை தமிழர்களின் பிரதிநிதிகள் போல காட்டியுள்ள செயல் மிகவும் மோசடியானதும் மக்களை ஏமாற்றுவதுமான செயலாகும்.

போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நாளை மாற்றும் உரிமை தமிழர்களின் மரபுகளை, வாழ்வியல் அடையாளங்களை தொடர்ச்சியாக அழித்துவரும் கிறிஸ்தவ ஆயர்களுக்கு ஒருபோதும் கிடையாது.
தமிழர்கள் தம் இனத்தவர்கள் போரில் இறந்ததை நினைவுகூரும் தினத்தை எக்காரணத்தைக் கொண்டும் மாற்ற மாட்டார்கள். அரசு பொது இடங்களில் நினைவு நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி மறுத்தாலும், ஒவ்வொரு தமிழர்களும் தம் மனங்களில் அத்தினத்தை தொடர்ச்சியாக நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவார்கள். ஐரோப்பிய கிறிஸ்தவர்களின் பல நூற்றாண்டு அராஜக ஆட்சியில், வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட போதும், வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்ட போதும் மனங்களில் சுமந்து பின்வந்த சந்ததிகளிடம் தம் மரபுகளை ஒப்படைத்த பெருமைமிக்க வரலாற்றை உடையவர்கள் எம் தமிழர்கள்.

மதம் மாற்றுவதனூடாக தமிழர்களின் இன பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் கிறிஸ்தவ மதமாற்ற ஆயர்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் தமிழர்களாக இருக்க முடியாது என்று தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இவ்வாறானவர்கள் தங்களைத் தமிழர்களின் தலைமைகளாக நிலைநிறுத்த முயல்வதை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மதம்மாறியவர்கள் தம் புதிய அடையாளத்துடன் அரசியல் அமைப்பு கொடுத்த வரைமுறைகளுக்கு அமைவாக வாழ்ந்துவிட்டு போகவேண்டும். அதனைவிடுத்து தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்புடுத்துவதையும், நல்லிணக்கத்தைக் கெடுத்து இனமுரண்பாட்டைத் தோற்றுவித்து தம் இனத்தை வளர்த்துக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

எந்த தமிழ் சிங்கள இளைஞர்களை போராடவைத்து உங்கள் இனத்தை வளர்க்க முயற்சித்தீர்களோ, அதே தமிழ் சிங்கள இளைஞர்கள் இணைந்து உங்களுக்கு எதிராக போராடும் காலம் உருவாகிவருகிறது என்பதை உணரவேண்டும்.
தொடர்ந்தும் இனங்களுக்கு இடையிலான பகைமையை உண்டாக்கும் செயற்பாடுகளை வளர்ப்பதையும், இனங்களின் பாரம்பரிய அடையாளங்களை அழிக்கும் செற்பாடுகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

உங்கள் தேசவிரோத இனவிரோத செயற்பாடுகள் நிறுத்தப்படாமல் தொடருமானால் எதிர்கால சந்ததிகள் கண்டனங்களுடன் நிறுத்த மாட்டார்கள் என்பதையும் எச்சரிக்கையாக கூறிக்கொள்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.