ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டப் பேரணியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

sajith 4
sajith 4

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (16) நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்டவர்கள் மற்றும் அதை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை மையப்படுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், நேற்று (16) இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, காலிமுகத்திடலை சென்றடைந்தது.

முன்னதாக குறித்து ஆர்ப்பாட்டப் பேரணி, ஹைட்பார்க்கில் இடம்பெறும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்திருந்த நிலையில், கொழும்பில் போராட்டம் நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறு காவல்துறையினர் நீதிமன்றங்களில் கோரியிருந்தனர்.

சில நீதிமன்றங்கள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணிக்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், கொழும்பு 5 ஆம் இலக்க நீதிவான் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அதனை முன்னெடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தன.

இவ்வாறான நிலையில், நேற்று (16) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அண்மையில் எதிர்கட்சி தலைவர் காரியாலயத்தில் குறிப்பு ஒன்றை வழங்கிச் சென்ற நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேதமாஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவர், மனநலம் குன்றியவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.