சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்துமூல சோதனை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வையில்

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை, இலங்கை பரீட்சை திணைக்களத்தின் மேற்பார்வையில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் அதிகளவானோர் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதனைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் தாம் வசிக்கும் பகுதியில், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான எழுத்து மூலப் பரீட்சையில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெறவுள்ளனர்.

இதேவேளை, தினசரி சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு, மிகவும் முன்கூட்டியே நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்களின் ஊடாக சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக திகதி மற்றும் நேரத்தைப் முன்பதிவுசெய்ய, இதற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கம் தற்போது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.