வரவு – செலவுத் திட்டம் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை – சுதந்திரக்கட்சி

Rohana Lakshman 850x460 acf cropped
Rohana Lakshman 850x460 acf cropped

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாதகமாக அமையவில்லை.

வரவு – செலவு திட்டம் தொடர்பில் சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஒரு பங்காளி கட்சியாக ஒன்றிணைந்திருந்தாலும் அரசாங்கத்தின் கொள்கைக்கும், சுதந்திர கட்சியின் கொள்கைக்கும் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

அரசாங்கத்தின் செயற்பாடும், கொள்கைகளும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாக அரசாங்கம் செயற்படுவதை பல்வேறு காரணிகள் ஊடாக சுட்டிக்காட்டலாம். தவறான தீர்மானங்களினால் நடுத்தர மக்களுக்கு பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர்.

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சாதகமாக அமையவில்லை. பல விடயங்கள் முரண்பட்ட வகையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சேவைகாலத்தை 65 ஆக அதிகரித்துள்ளமை பொருத்தமற்ற செயற்பாடாகும். இதன் காரணமாக இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரதான தொழிலின்மை வீதம் மேலும் வலுவடையும். நிதியமைச்சரின் தீர்மானங்கள் மாறுப்பட்ட வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதாக வரவு – செலவு திட்டத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் தேசிய விவசாயத்துறையை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான பின்னணியில் எவ்வாறு தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவது.

வரவு – செலவு திட்டம் தொடர்பில் சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் சிறந்த தீர்மானத்தை அறிவிக்கும் என்றார்.