மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பொதுச் சுடர் ஏற்றும் பீடம் இடித்தழிப்பு

001
001

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பாக துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய வி.எஸ் சிவகரன் தெரிவிக்கையில்,,,

துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவம் உள்ள போது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது.

பல வருடங்களாக இருந்த இந்த பொதுச்சுடர் ஏற்றும் தீம் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

நேற்று (18) மாலை தகவல் கிடைத்ததும் தானும் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும் மன்னார் நகர சபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் சென்று பார்வையிட்டோம்.

எனவே இவ்வாறு தீபமேற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசு சிற்றின்பம் அடையலாம்.

தமிழ் மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் மாவீரர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.என அவர் மேலும் தெரிவித்தார்.