இந்துக்களின் பண்டிகைகளுடன் அரசியல் வேண்டாம் என ஆயர்களுக்கு எச்சரிக்கை!

IMG 6536
IMG 6536

ஏற்கனவே போரினால் உயிர்நீத்த எம் உறவுகளின் நினைவு தினத்தை வருடா வருடம் தமிழர்கள் அனுஷ்டித்து வருகின்றார்கள். இதில் தயவுசெய்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்துக்களின் பண்டிகைகளுடன் உங்களது அரசியலை செய்ய வேண்டாம் எனவும் இந்த அறிக்கையை ஆயர்கள் வாபஸ் பெற வேண்டுமென இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு தேசிய அமைப்பாளர் சி.வரதநிரோஷன்  கோரிக்கை விடுத்துள்ளார். 

மட்டக்களப்பு திருச்சொந்தூர் முருகன் ஆலய மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் நினைவு தினத்தை வடக்கு, கிழக்கு ஆயர்கள் பேரவை இல்லங்களிலும் ஆலயங்களிலும் நவம்பர் 20ம் திகதி அனுஷ்டிக்கும்படி துண்டுப் பிரசுரம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

ஏற்கனவே போரினால் உயிர்நீத்த எம் உறவுகளின் நினைவு தினத்தை வருடா வருடம் தமிழர்கள் அனுஷ்டித்து வருகின்றார்கள். இந்த நிலையில் இந்த ஆயர்களின் அழைப்பினை இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புக்களின் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஏனென்றால் இன்று 19.11.2021 சர்வாலய தீபமும் நாளை 20.11.2021 விஷ்ணுவாலய தீபமுமாகும். இந்துக்களின் பண்டிகைகளுடன் உங்களது அரசியலை செய்ய வேண்டாம். 20ம் திகதி சனிக்கிழமை விஷ்ணு ஆலயங்களிலே தீபம் ஏற்றினால் பாதுகாப்பு படையினரால் அச்சுறுத்தல்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகம். அதுமட்டுமல்லாது இதே நிலமை தொடருமாக இருந்தால் 2029ம் ஆண்டு 20ம் திகதி வீடுகளில் தீபம். இதனால் வீணான இனக்கலவரத்தை தோற்றுவிக்கும். 

ஆகவே இந்துப் பெருமக்களே, இந்து ஆலயங்களின் நிர்வாகிகளே சிந்தித்து செயற்படுங்கள். ஆயர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலே திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு போன்ற இடங்களைச் சேர்ந்த ஆயர்களே கையொப்பமிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் தலைமைப் பீடமான கொழும்பிலுள்ள ஆயர் ஆல்பர்ட் மல்கம் ரஞ்சித் தற்போதைய இலங்கை ஜனாதிபதி, பிரதமர்களுடன் சந்தித்து தங்களுக்குத் தேவையானவற்றை பெற்று ஒற்றுமையாக இருப்பார்கள். 

ஆனால் வடக்கு, கிழக்கில் கலவரத்தை தூண்டி இந்துக்களை மதமாற்றும் மோசடியில் இந்த பேராயர்கள் களம் இறங்கியுள்ளார்கள். எனவே  இந்துக்களே விழிப்படையுங்கள். ஆயர்கள் இந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டுமென எச்சரிக்கின்றோம் என அவர் தெரிவித்தார்