வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு தோல்வி!

2DC8C4D8 9237 431F 92D9 3D47AA3D4CB9
2DC8C4D8 9237 431F 92D9 3D47AA3D4CB9

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான பாதீடு 8 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

வவுனியா வடக்கு பிரதேச சபையின் அடுத்த ஆண்டுக்கான பாதீடு அதன் தவிசாளர் சபாரத்தினம் தணிகாச்சலத்தினால் இன்று முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றதோடு பாதீடு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இதன்போது 26 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மாத்திரம் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 3 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் 3 உறுப்பினர்களும், சுயேட்சை ஒரு உறுப்பினருமாக 15 பேர் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.

வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் சபைக்கு பிரசன்னமாகியிருக்கவில்லை.