மாவீரர் வாரம் ஆரம்பித்ததால் முல்லைத்தீவில் பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரம்!

maaveerar naal 2021 mullaitivu secrty 2
maaveerar naal 2021 mullaitivu secrty 2

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக தாயகத்தில் மாத்திரமின்றி உலகமெங்கும் வாளும்  தமிழர்களால் அனுஸ்டிக்கப்படுகின்ற மாவீரர் நாளின் மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முப்படைகளாலும்  பாதுகாப்பு கெடுபிடிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

வீதிகளில் இருந்த வீதி தடைகளுக்கு மேலதிகமாக வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு வீதி சோதனை நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. மாவீரர் துயிலுமில்ல வளாகங்களை சூழவும் இராணுவம் மற்றும் காவல்துறையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான வீரமறவர்கள் நினைவாக வருடம் தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் உலகமெங்கும் வாழும் தமிழ் உறவுகளால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

வருடந்தோறும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி உயிரிழந்த தமது உறவுகளை நினைந்து துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு மலர் தூவி சுடரேற்றி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஸ்டிக்க முடியாத நிலை இலங்கையில் உருவாக்கப்பட்டது.

 இவ்வாறான நிலையில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தமுடியாத மனவேதனையில் இருந்த உறவுகளுக்கு 2018 ம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் மீண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிலையில் கடந்த வருடம் (2020) முதல் புதிதாக ஆடசிக்கு வந்த கோத்தபாய அரசாங்கமானது  நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று  மாவீரர் நாள்  நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் காவல்துறையினர் கடந்த 17.11.2021 அன்று நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையில் மாங்குளம் நீதிமன்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை, மல்லாவி, ஜயன்கன்குளம், மாங்குளம், புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் ஆகிய ஏழு காவல் நிலையங்களை  சேர்ந்த காவல்துறையினரினால் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 47 பேருக்கு மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு தடையுத்தரவுகளை பெற்ற காவல்துறையினர் உரியவர்களுக்கு தடையுத்தரவுகளை வழங்கியுள்ள போதும் எங்காவது மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்படாலாம் என்ற சந்தேகத்தில் பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை அரச புலனாய்வாளர்கள் ,இராணுவம், காவல்துறை  உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான வீதி தடைகள் கொரோனாவை காரணம் காட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அதற்க்கு மேலதிகமாக அண்மையில் புதிய வீதி தடைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக தண்ணீர் ஊற்று சந்தி ,ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிய வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனை விடவும் மாவட்டம் பூராக அமைக்கப்பட்டுள்ள சுமார் 15 க்கு மேற்பட்ட வீதி தடைகளில் வீதியால் பயணிப்போர் திடீரென சோதனைகளுக்கு உட்ப்படுத்தப்படுவதோடு சிலர் பதிவுசெய்யப்படுகின்றனர்.

இதனைவிடவும் வாகனங்கள் சோதனை செய்யப்படுவதோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம், கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லம், முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லம், அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம், தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் இறுதி யுத்த காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம், இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லம், முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் என மாவடடத்தில் உள்ள துயிலுமில்ல வழக்கங்களை அண்மித்து வீதி சோதனை சாவடிகளை அமைத்துள்ளதோடு துயிலுமில்ல வளாகங்களுக்குள் யாரும் நுழையாதவாறு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இராணுவத்தினர் காவல்துறையினர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு பாதுகாப்பு கெடுபிடிகளுக்குள் மக்கள் மத்தியில் அச்ச சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.