மாவீரர் நிகழ்வுக்குத் தடைகோரி பருத்தித்துறை, மல்லாகம் நீதிமன்றங்களில் மனுதாக்கல்!

46718951 2177878115812391 3601137285204017152 n 1
46718951 2177878115812391 3601137285204017152 n 1

யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வுக்குத் தடை விதிக்கக் கோரி, பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றங்களில் காவல்துறையினரினால் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை நாளை இடம்பெறவுள்ளது.

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை காவல்நிலைய பொறுப்பதிகாரிகளினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றிலும் சுன்னாகம், தெல்லிப்பளை மற்றும் காங்கேசன்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரிகளினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றிலும் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று நவம்பர் 21ஆம் திகதி தொடக்கம் வரும் நவம்பர் 28ஆம் திகதிவரை இந்த தடை உத்தரவு வழங்குமாறு காவல்துறையினரினால் கோரப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டக்கோவையின் 120ஆவது பிரிவுக்கு அமையவும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் படியும், இந்த நிகழ்வை நடத்துவது குற்றம் என்றும் இதனைத் தடை செய்யுமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர். நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரமும் பொதுமக்களை ஒன்றுதிரட்டுவதற்கு தடை உள்ளதாகவும் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விண்ணப்பங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு நீதிமன்றங்களிலும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளோர் மன்றில் முன்னிலையாகவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த விண்ணப்பங்கள் மீது, நாளை திங்கட்கிழமை கட்டளை பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிமன்றங்கள், பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை சேர்ப்பிக்க உத்தரவிட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் காவல்துறையினரினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு அனுமதியளித்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம், தடை உத்தரவு கட்டளையை நேற்றுமுன்தினம் வழங்கியிருந்தது.