மாணவர்கள் மத்தியில் புதிய உப டெல்டா பிறழ்வு பரவ வாய்ப்பு – சன்ன ஜயசுமன

771cb541 5a5e5e9a bd7c3924 channa jayasumana 850x460 acf cropped 850x460 acf cropped
771cb541 5a5e5e9a bd7c3924 channa jayasumana 850x460 acf cropped 850x460 acf cropped

நாட்டில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய உப டெல்டா பிறழ்வு பாடசாலைகள் மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் , மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்வதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள பலரும் தொற்று அறிகுறிகள் ஏற்படும் போது அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.

அவ்வாறு பொறுப்பின்றி செயற்படாமல் அறிகுறிகள் காணப்படுமாயின் அன்டிஜன் பரிசோதனையையாவது மேற்கொள்ளுமாறும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கேட்டுக் கொண்டார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கையில் உருவான முதலாவது டெல்டா திரிபான உப டெல்டா பிறழ்வு தற்போது இனங்காணப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் கணிசமானளவு குறைவாகும்.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசியைப் பெற்று கொவிட் தொற்றுக்கு உள்ளாகுபவர்களுக்கு சிறியளவிலான தடிமன் போன்ற நிலைமை மாத்திரமே ஏற்படுகிறது.

இதன் காரணமாக தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ள பலரும் தொற்று அறிகுறிகள் ஏற்படும் போது அதனை உதாசீனப்படுத்துகின்றனர்.

அவ்வாறு பொறுப்பின்றி செயற்படாமல் அறிகுறிகள் காணப்படுமாயின் அன்டிஜன் பரிசோதனையையாவது மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

காரணம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் , அது தீவிர நிலைமைக்கு கொண்டு செல்லாது என்ற போதிலும் , அவர்களிடமிருந்து ஏனையோருக்கு தொற்று பரவினால் அது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

இவ்வாறான நிலையில் தற்போது இனங்காணப்பட்டுள்ள புதிய உப டெல்டா பிறழ்வு பாடசாலைகள் மாணவர்கள் மத்தியில் பரவக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் , மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாரம் மேலும் 19 இலட்சம் பைசர் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறவுள்ளன. இது தவிர டிசம்பர் மாதம் முதல் வாராந்தம் 30 இலட்சம் தடுப்பூசிகளை எமக்கு வழங்குவதாக பைசர் உற்பத்தி நிறுவனம் உறுதியளித்துள்ளது என்றார்.