உற்பத்தி செயற்பாடுகளில் உயர்பெறுபேறுகளை வெளிப்படுத்தியோரிற்கு சான்றிதழ்கள்!

kachcheri 33
kachcheri 33

மாவட்ட செயலக உற்பத்தித்திறன் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் உற்பத்தித்திறன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளில் பங்குபற்றி உயர்பெறுபேறுகளை வெளிப்படுத்திய உத்தியோகத்தர்கள் மற்றும் கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (22) மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கொவிட் 19 அசாதாரண நிலையினை கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகத்தர்கள் நேரடியாகவும், ஏனைய உத்தியோகத்தர்கள் செயலியூடாகவும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது உற்பத்தித்திறன் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்ற உற்பத்தித்திறன் செயற்பாடுகள், போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள், பொதுத்துறைசார்ந்த வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட உத்தியோகத்தர்களிற்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பசுமை உற்பத்தித்திறன் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக மாவட்ட செயலக கிளை ரீதியாக நடாத்தப்பட்ட பூந்தோட்டப் போட்டியில் வெற்றிபெற்ற கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதனை விட ஒவ்வொரு மாதத்திற்கும் கிளை ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட உத்தியோகத்தர்களும் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போட்டிகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கவுரைகள் உத்தியோகத்தர்களுக்கு முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அடுத்துவரும் காலங்களில் குறித்த செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.