முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவு திறப்பு!

3V2A7213 960x640 3
3V2A7213 960x640 3

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக இல்லாமல் இருந்த இருதய சிகிச்சை பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளரும் சட்ட வைத்திய அதிகாரியுமான க.வாசுதேவ அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை நிபுணர் வைத்தியர் பு.லக்ஸ்மன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இருதய சிகிச்சை பிரிவினை நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் வவுனியா மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜே.நிலக்சன் உள்ளிட்ட வைத்தியர்கள்,வைத்திய நிபுணர்கள் ,வைத்தியசாலை ஊழியர்கள், தாதியர்கள்,முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருதய சிகிச்சை பிரிவுகள் இருந்தாலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எங்குமே மிக நீண்ட காலமாக இல்லாமல் இருந்த இருதய சிகிச்சை பிரிவு இன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டதன் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இருதய சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மிகநீண்டதூரம் பயணம் செய்து குறித்த சிகிச்சைகளை பெற்றுவந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.