சீன சேதன பசளை விவகாரத்தில் பின்வாங்கும் அரசாங்கம்!

images 14
images 14

சீன சேதன பசளை மாதிரிகளை மீண்டும் பெற்று பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை தீர்மானித்துள்ளது. இதனை கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே வெளிப்படுத்தினார்.

தனது நாட்டு நிறுவனத்தின் பிரச்சினையை அரச பிரச்சினையாகக் கொண்டு கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் நெருக்குதல்களே இவ்வாறானதொரு தீர்மானத்திற்கு வர காரணமாகியுள்ளது.

இந்த பசளை பிரச்சினையால் இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் எவ்வித முரண்பாடும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் கூறும் அளவிற்கு நிலைமை இன்று மாறியுள்ளது.

சீனாவிலிருந்து கப்பலில் கொண்டுவரப்பட்ட சேதன பசளையில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் இருப்பதாக தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி,தனிமைப்படுத்தல் சேவை நிலையம் உறுதி செய்தது.

இதனை தொடர்ந்து அந்த பசளையை அரசாங்கம் நிராகரித்தது. ஆனால் சீனா பிடிவாதமாக செயற்பட்ட நிலையில் , குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதியளிக்க வேண்டாம் என அரசாங்கம் அறிவித்தது.

சீன நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ள உத்தேசிக்கப்பட்ட சேதன பசளை மாதிரி உரத்தில் இலங்கையின் மண் வளத்திற்கும், காலநிலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் அடங்கியிருப்பது இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் போது உறுதிப்படுத்தப்பட்டன.

ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த சீனா , ‘சர்வதேச தாவரவியல் பாதுகாப்பு பிரகடனத்தின்படி ஏர்வினியா நுண்ணுயிர் கண்டறிவதற்கு குறைந்தது 6 நாட்களேனும் தேவைப்படும்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை எவ்வாறு 3 நாட்களில் பரிசோதனையை செய்து நுண்ணுயிர் இருப்பதை உறுதி செய்தது என கேள்வி எழுப்பி அரசாங்கத்தின் நிராகரிப்பை சீனா சவாலுக்கு உட்படுத்தியது.

இதனை தொடர்ந்து தொடர்ந்தும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் வங்கியை சீனா கறுப்பு பட்டியலில் சேர்த்தது.

இந்த சம்பவமானது இலங்கை மீதான சீனாவின் மேலாதிக்க போக்கை வெளிப்படுத்தியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

பசளை இறக்குமதிக்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட வில்லை. மாறாக அது நிறுவனங்கள் சார்ந்த ஒப்பந்தங்களாகும்.

இவ்வாறானதொரு நிலையில் கொழும்பில் உள்ள சீன தூதரகம் எவ்வாறு தலையீடு செய்ய முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் தூதரகம் நேரடியாகவே அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கும் வகையில் தீர்மானங்களை எடுத்தது.

இது முற்றிலும் வணிக நடவடிக்கை என்பதால் தூதரக தலையீடு அநாவசியமானது என்று அரச தரப்புகள் கூறிய போதும் சீனா கண்டுக்கொள்ளவில்லை. இருதரப்பிற்கும் இடையில் இராஜதந்திர பணிப்போராக மாறும் வகையில் சேதன பசளை விவகாரம் அமைந்தது.

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தரம் குறைந்த பசளையை திருப்பியனுப்பினாலும் அதற்கான நஷ்டஈடாக 7 டொலர் மில்லியன் வழங்க வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

இதுவே பசளை விவகாரத்தில் இலங்கை சீனாவிடம் மண்டியிட காரணம் என பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜனபல வேகய சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் மீண்டும் சீனாவிடமிருந்து சேதன பசளை மாதிரிகளை பெற்று ஆய்வுக்கு உட்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளமையானது சீனாவின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பின்னடைவு என்பதுடன் கறுப்புப்பட்டியலிலிருந்து மக்கள் வங்கியை நீக்கி கொள்வதற்கும் இலங்கைக்கு மாற்று வழிகள் இல்லை. இலங்கையின் இறையான்மை சீனாவின் இருக்கமான பிடிக்குள் சிக்கிக்கொண்டுள்ளதா? ஏன்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் பசளை விவகாரம் அமைந்துள்ளது.