மன்னாரில் 7257 குடும்பங்களைச் சேர்ந்த 26,519 நபர்கள் பாதிப்பு!

IMG 7179
IMG 7179

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்டத்தில் 7257 குடும்பங்களைச் சேர்ந்த 26,519 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரிவில் 7252 குடும்பங்களைச் சேர்ந்த 26,499 நபர்களும், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 367 குடும்பங்களைச் சேர்ந்த 1380 நபர்கள் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான அத்தியாவசிய உதவிகளை மாவட்டச் செயலகத்தின் ஊடாக மன்னார் பிரதேச செயலகம், மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை  மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டு உடைந்தமையால் குறித்த பாதையூடாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக சீர் செய்யும் வகையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு மன்னார் மாவட்ட அரச அதிபரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து குறித்த பாதை புனரமைப்பு செய்யப்பட்டு,தற்காலிகமாக போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றது. தலை மன்னார், பேசாலை, தாழ்வுபாடு, தோட்டவெளி மற்றும் மன்னார் நகர பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களும் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.