மலையக கல்வி வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் – எம்.ராமேஸ்வரன்

arjuna 3 1
arjuna 3 1

முன்னர் 15 இலட்சம் மக்கள் தோட்டத்தொழிலை மட்டுமே நம்பியிருந்த நிலையில் இன்று எமது சமூகம் கல்வியில் பாரிய முன்னேற்றத்தை கண்டு வெவ்வேறு துறைகளை நாடுகின்றனர் என சபையில் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன், எமது அரசாங்கம் மலையக கல்வி வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (01)  இடம்பெற்ற கல்வி அமைச்சு மற்றும் நான்கு இராஜாங்க அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

மலையக கல்வியில் ஒருகாலத்தில் நாம் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும் இன்று அந்த நிலைமைகள் இல்லை, பெருவாரியாக பல துறைகளில் எமது சமூகம் வீறுநடை போட கல்வியே காரணம். அதற்கு எமது தலைவர்கள் முன்னெடுத்த வேலைத்திட்டமே காரணமாகும். 

மறைந்த தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அப்போதைய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆசிரியர் நியமனங்களை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுத்தார். 

முன்னர் 15 இலட்சம் மக்கள் தோட்டத்தொழிலை மட்டுமே நம்பியிருந்த நிலையில் இன்று எமது சமூகம் கல்வியில் பாரிய முன்னேற்றத்தை கண்டு வெவ்வேறு துறைகளை நாடுகின்றனர்.

கல்விக்கு எவ்வளவு வளங்கள் வந்தாலும் பற்றாக்குறையும் உள்ளது, அதனையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமூகத்தின் வளர்ச்சிக்கு எமக்கிருக்கும் ஒரே தீர்வு கல்வியாகும். 

ஆகவே பற்றாக்குறையை நீக்கி எமது மக்களின் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். மலையகத்தில் பல தேசிய பாடசாலைகள் அரசாங்கத்தின் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. அவற்றுக்கான வளங்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

முன்னைய ஆட்சியில் பாடசாலைக்கான வளங்கள் கிடைத்தது அதனை நாம் மறுக்கவில்லை, ஆனால் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை முன்னெடுக்க வேண்டும். 

சமூகத்தின் வளர்ச்சி கல்வியில் தங்கியுள்ளன. ஆகவே அதிபர் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

அதேபோல் மலையகத்திற்கு பல்கலைக்கழகம் பெற்றுக்கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை எமது அரசாங்கம் முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.