சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவரின் அடிப்படை ஆட்சேபனை நிராகரிப்பு!

sampikka
sampikka

2016 ஆம் ஆண்டு இராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை சட்ட ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெலிக்கடை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் ஏற்படுத்திய விபத்தில் சந்தீப் சம்பத் என்ற இளைஞர் காயமடைந்த விவகாரத்தில், சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் வெலிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்டு தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி காவல்துறை அத்தியட்சகர் சுதத் அஸ்மடல, சம்பிக்க ரணவக்கவின் சாரதியாக செயற்பட்ட திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

16 குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு நேற்றுமுன்தினம் (30) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் அடிப்படை ஆட்சேபனையை முன் வைத்தனர்.

இந்நிலையில் பிரதிவாதிகள் தரப்பின் ஆட்சேபனைக்கு இன்று (2) பதிலளிப்பதாக மன்றில் முன்னிலையான, வழக்கு தொடுநரான சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் அறிவித்தார்.