எரிவாயுவுடன் இருந்த கொள்கலன்களுக்காக எந்தத் தீர்வும் இல்லையென நுகர்வோர் குற்றச்சாட்டு!

gas
gas

புதிய முறைமைக்கு அமைய, சந்தைக்கு எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டாலும், இதற்கு முன்னர் எரிவாயுவுடன் இருந்த கொள்கலன்கள் தொடர்பில், எவ்வித தீர்வையும் வழங்குவதற்கு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களோ அல்லது அரசாங்கமோ இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதன் காரணமாக தாங்கள் மிக அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சமையல் எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள், அண்மைய நாட்களில் பதிவானதை அடுத்து, அந்த எரிவாயு செறிமானம் அடங்கிய கொள்கலன்களை சந்தைக்கு விடுவிப்பதை இடைநிறுத்தியது.

இதற்கமைய, அதனை அடையாளம் காணக்கூடிய வகையில் பொலித்தீன் முத்திரையின் நிறத்தை மாற்றி, நேற்று முதல் எரிவாயு புதிய கொள்கலன்களை சந்தைக்கு விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், தற்போது வரையிலும், தங்களுக்கு புதிய எரிவாயு கொள்கலன் கிடைக்கவில்லை என விற்பனை முகவர்களும், நுகர்வோரும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்டு, தற்போது வீடுகளில் உள்ள சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில், இதுவரையில் அதிகாரிகள் எவ்வித வழிகாட்டல் கோவையையும் வழங்கவில்லை.

இந்த நிலையில், இது குறித்து வினவியபோது பதிலளித்த நுகர்வோர் அதிகார சபை, தமது அதிகார சபையினால் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவோ அல்லது ஆலோசனை வழங்கவோ முடியாது எனத் தெரிவித்தது.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சினால் அதற்கான மாற்று வழி அல்லது நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அதிகார சபை குறிப்பிட்டது.

இதேவேளை, எரிவாயு கொள்கலனுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளது.