தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித்திட்டம் இன்று ஆரம்பித்து வைப்பு!

IMG 20211208 WA0035 1
IMG 20211208 WA0035 1

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் “ஆரோக்கியமான நாளை” எனும் தொனிப்பொருளில் இருநாட்களைக் கொண்ட தேசிய உடற்தகுதி நிகழ்ச்சித்திட்டம் இன்று(08) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 9.00மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த தேசிய நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்து அங்கு  கருத்துத்தெரிவிக்கையில் : இப்பயிற்சிப்பட்டறையானது மன வலிமையினை அதிகரிக்கச் செய்து தற்கொலைகளை தடுப்பதற்கும் இதை விட தொற்றாநோய்களை இல்லாதொழிப்பதை நோக்காக கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உணவுப்பழக்க வழக்கங்கள், போதிய உடற்பயிற்சியின்மை தொற்றாநோய்களுக்கு அடிப்படைக் காரணங்களாகின்றன. சிறந்ந மன வலிமையின்மையால் தற்கொலைகள் அதிகரித்துச் செல்கின்றன. எனவே இங்கு தாங்கள் பெற்றுக்கொண்ட அறிவினை இத்துடன் முடித்துக்கொள்ளாமல் அதனை பரவசெய்வதன் மூலமாக சிறந்த இளைஞர் சமூகத்தை கட்டியெழுப்பமுடியும் என தெரிவித்தார்.

குறித்த பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் விளையாட்டு விஞ்ஞானப்பிரிவின் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி.கே.கேதீஸ்வரன் மற்றும் கலாநிதி சபானந்த் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கலாநிதி.கே.கேதீஸ்வரன் அவர்கள் மனநலம் மற்றும் மன தளர்ச்சியை மேம்படுத்துவதற்கான அடிப்படை உடற்பயிற்சிகளை செயன்முறையாக விளக்கமளித்தார். மேலும் கலாநிதி சபானந்த் அவர்கள் உடற்பயிற்சி மற்றும் உடற்தகுதியின் முக்கியத்துவம், காயத்தடுப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக செயன்முறையாகவும் கோட்பாடு ரீதியாகவும் விளக்கமளித்திருந்தார். இரண்டாம் நாட் பயிற்சி நாளை இடம்பெறவுள்ள நிலையில் இருநாட் பயிற்சி நெறியில் கலந்து கொள்பவர்களுக்கு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.