அம்பாறையில் எய்ட்ஸ் நோயாளர்கள் அடையாளம்!

image 2021 12 10 214537
image 2021 12 10 214537

அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுவதாகவும், கல்முனை பிராந்தியத்தில் 4 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் இன்று (10) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்,

ஐக்கிய நாடுகள் சபையினால் டிசம்பர் 1 திகதி உலக எய்ட்ஸ் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. 1981 ஆண்டு முதலாவது எய்ட்ஸ் நோயாளி இனங்காணப்பட்டதை தொடர்ந்து இன்று வரை 36 மில்லியன் மக்கள் இந்த எயிட்ஸ் நோயினால் இறந்துள்ளனர். 37 மில்லியன் மக்கள் இன்று வரை எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இலங்கையை பொறுத்த மட்டில் 2,600 பேர் எய்ட்ஸ் நோய்க்காக சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். இன்றும் இலங்கையில் 1,000 எயிட்ஸ் நோயாளிகள் எம்மிடையே மறைந்து வாழ்கின்றனர். தற்போது அம்பாறை மாவட்டத்தில் 51 எய்ட்ஸ் நோயாளர்கள் காணப்படுகின்றனர். கல்முனை பிராந்தியத்தில் 4 எய்ட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எய்ட்ஸ் நோய் ஆனது ஒருவரின் நிர்பீடணசக்தியை இல்லாதொழிக்கின்றது. எய்ட்ஸ் நோயானது 3 முறைகளில் பிரதானமாக பரவல் அடைகின்றது. அதாவது பாதுகாப்பற்ற பாலியல் செயற்பாடு தாய் தந்தையினுடாக பிள்ளைக்கு கடத்தப்படுதல் பாதுகாப்பற்ற ஊசிகள் மற்றும் இரத்த மாதிரிகளின் ஊடாகவும் பரவுகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் பாதுகாப்பற்ற முறையில் ஆண் ஆணுடன் பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் 40 வீதத்திற்கு அதிகமாக எயிட்ஸ் அதிகரித்து செல்கின்றமை சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் என்றார்.