டொலர் தட்டுப்பாட்டுக்கு நிவாரணம் கோரி பால்மா இறக்குமதியாளர்கள் கடிதம்!

milk powder
milk powder

பால்மா இறக்குமதிக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டொலர் தட்டுப்பாடுக்கு நிவாரணம் கோரி நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கு கடிதம் ஒன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு வழங்கப்படும் வரையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு தட்டுப்பாடு நிலவும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக 50 சதவீதமான பால்மாக்களையே இறக்குமதி செய்ய முடிகின்றது.

அதேநேரம், இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களின் விலைகளில் மீண்டும் திருத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினையினால் இறக்குமதிகள் மேலும் மட்டுப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள், ஒளடதம், அத்தியாவசிய உணவு பொருள் ஆகியவற்றின் இறக்குமதிக்காக மாத்திரமே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு இணையாக சந்தையில் தேசிய பால்மாக்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

மழை மற்றும் மாகாண சபை ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்கை கருத்தரிப்பு நிறுத்தப்பட்டமை ஆகிய காரணிகளால் தேசிய பால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மனித பாவனைக்கு உதவாத 10,000 கிலோ கிராம் சீனி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் பின்புறத்தில் உள்ள தனியார் களஞ்சியசாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சீனி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை டுபாயில் இருந்து கொண்டு வந்ததற்கு இணையாக பொதி செய்து அதனை விற்பனைக்கு தயார்ப்படுத்தியிருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.