15 வருடங்களின் பின் அரசியல் கைதியொருவர் நிரபராதி என விடுதலை!

11 1386739608 jail4 600
11 1386739608 jail4 600

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது. 

மானிப்பாய் வீதி , தாவடியை சேர்ந்த தேவராசா சிவபாலன் (வயது 45) என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அதன் பின் 2 வருட கால விசாரணைகளின் பின்னர் , பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 

வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 ஆண்டு காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார். 

அந்நிலையில் கடந்த 14ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை  நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. 

இதேவேளை அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், அவர் கைது செய்யப்பட்டு , தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும் , தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.