எரிவாயுவில் அடங்க வேண்டிய செறிவு தொடர்பில் தர நிர்ணய நிறுவகம் அறிவிப்பு!

gas 1
gas 1

சமையல் எரிவாயு கொள்கலனின் அடங்க வேண்டிய ப்ரொப்பேன் செறிவு 30 சதவீதமாக இருக்க வேண்டுமென இலங்கை தர நிர்ணய நிறுவகம் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை தரநிர்ணய நிறுவகத்தின் தரநிலையுடனான எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்குமாறு, லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமூக செயற்பாட்டாளர் நாகனந்த கொடுத்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தற்போது சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள பெற நடவடிக்கை எடுக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் சமையல் எரிவாயு கொள்கலன்களில் அடங்கும் செறிமானம் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் இரண்டு நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தற்போது நுகர்வோரிடம் உள்ள பகுதியளவில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயுக்களை மீள பெற்று அதற்காக ஓரளவு பணத்தை செலுத்துமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து முறைமை ஒன்றை தயாரிக்குமாறு நீதியரசர்கள் குழாம் நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன்போது, தர நிர்ணய நிறுவனம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி மனோஹர ஜயசிங்க, சமையல் எரிவாயுவில் அடங்கும் செறிமானம் தொடர்பில் தீர்மானிப்பதற்கான விசேட கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவிருந்த போதிலும் அவசரமாக அந்த சந்திப்பை நேற்றைய தினம் நடத்தியதாக குறிப்பிட்டார்.

இதற்கமைய, சமையல் எரிவாயு கொள்கலனின் அடங்க வேண்டிய ப்ரொப்பேன் செறிமானம் 30 சதவீதம் என இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அரச சட்டத்தரணி தெரிவித்தார்.

இதேவேளை, லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

சமையல் எரிவாயுக்களின் தரம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு முறைப்பாடு தொடர்பில் சாட்சி வழங்குவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, இரண்டாவது கப்பலில் இருந்து பரிசோதிக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு மாதிரிகள் உரிய தரநிலையைக் கொண்டிருக்கவில்லையென நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.