குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகணமே அமைச்சு பதவியை துறப்பேன் – கெஹெலிய

விசேட வைத்தியர் நியமனத்தில் நான் அரசியல் அழுத்தம் பிரயோகித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் மறுகணமே நான் அமைச்சு பதவியை துறப்பேன் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பல்வேறு கோரிக்கையினை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தற்போது பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். குடும்ப சுகாதார வைத்தியர்களின் சேவை இடமாற்றம், விசேட வைத்தியர் நியமனத்தின்போது அரச சேவை ஆணைக்குழுவை இணைத்துக் கொள்ளல், வைத்தியர்களின் வருடாந்த இடமாற்றம் ஆகிய கோரிக்கைகளுக்கு தீர்வு காண சுகாதாரத்துறை அமைச்சு அரச சேவை ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை கோரியுள்ளது.

வைத்தியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகையில் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வார்கள். அரச அதிகாரிகள் சங்கத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டாம் என ஏனைய சுகாதார சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஒரு தரப்பினரது கோரிக்கைகளை நிறைவேற்றும் போது பிறிதொரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட முனைவார்கள். ஆகவே சுகாதார சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு பொது கொள்கையின் அடிப்படையில் முரண்பாடற்ற வகையில் தீர்வு காண்பது அவசியமாகும்.