அதிகாரிகளின் துணையுடன் கிரவல் அகழ்வு! பெக்கோ இயந்திரமும் சாரதியும் கைது

1644307474 sand 2
1644307474 sand 2

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கூழாமுறிப்பு பிரதேசத்தில் அனைத்து திணைக்களங்களின் அனுமதியோடும் வழங்கப்பட்டிருக்கின்ற அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி முறைகேடாக அளவுக்கு அதிகமான கிரவல் அகழ்ந்து செல்வது மக்களால் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டு வந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலை காணப்பட்டது

இந் நிலையில் நேற்றைய தினம் (07) குறித்த பகுதிக்கு மக்களின் முறைப்பாட்டுக்கு அமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் ஒருவர் குறித்த இடத்திற்கு காவற்துறையினரை அழைத்த நிலையில் காவற்துறையினரினால் அங்கு அளவுக்கதிகமான கிரவல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெக்கோ இயந்திரத்தையும் அதனுடைய சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இந்த முறைகேடான அகழ்வு நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் கிரவல் அகழப்படும் காணி தனியார் ஒருவருக்கு சொந்தமான காணி. அதனுடைய ஆவணங்கள் காணி உரிமையாளரிடம் யுத்த காலத்தில் தொலைந்த நிலையில் அந்த காணி தொடர்பில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணிப்பகுதிக்கு பல தடவைகள் சென்று காணி ஆவணங்கள் கோரிய போதும் அதற்கான ஆவணங்களை வழங்க மறுத்து வந்த ஒட்டுசுட்டான் பிரதேச காணி பகுதி உத்தியோகத்தர்கள் அந்தக் காணியை கிரவல் அகழ்வுக்காக வழங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக குறித்த இடத்துக்கு பொறுப்பான காணி உத்தியோகத்தர் குறித்த பகுதியில் வேறு ஒருவரிடம் கிரவல் அகழ்வு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்றுக்கொண்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்து அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகிறது. இதேவேளை குறித்த பகுதிக்கு பொறுப்பான கிராம அலுவலர் அவருடைய மனைவியின் காணி என தெரிவித்து கருவேலன்கண்டல் கிராமத்தில் கடந்த வருடம் சட்டவிரோதமாக கிரவல் அகழ்ந்து அது காவற்துறையினரால் முற்றுகையிடப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

இதனை விட வெளி மாவட்டத்தவர்களுக்கு மணல் கிரவல் அனுமதி வழங்குவதில்லை எனவும் அவ்வாறு வழங்குவதெனில் அபிவிருத்தி குழு கூட்ட அனுமதி பெறவேண்டும் என முன்னாள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் வெளி மாவட்டத்தவர்களுக்கு கடிதம் வழங்கியுள்ளார். அதன் பின்னர் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு இந்த அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு குறித்த கிராம அலுவலர் காணிப்பகுதி உத்தியோகத்தர் முன்னாள் பிரதேச செயலாளர் இணைந்து தனியாருக்கு காணியை வழங்காது கிரவல் அகழ்விற்கு வழங்கியமை பாரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இதனை விட முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் காணிகளில் கிரவல் அகழ்விற்கு அனுமதி வழங்க வேண்டாமென முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் அனைத்து பிரதேச செயலகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு தெளிவுபடுத்த பட்ட நிலையில் குறித்த காணியை தனியார் காணி என குறித்த நபருக்கு உறுதிப்படுத்தி வழங்கினால் கிரவல் அகழ்வுக்கு வழங்க முடியாது என்ற நிலையில் குறித்த நபருக்கு அவருடைய காணி ஆவணம் இல்லை எனவும் அது உங்களுடைய காணி அல்ல காணியை வழங்க முடியாது எனவும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் குறித்த கூழாமுறிப்பு பகுதியில் குறித்த காணி அரச காணி என தெரிவித்து திணைக்களங்கள் அனைத்தினதும் அனுமதியுடன் வெளிமாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கிரவல் அகழ்விற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இருந்த போதும் அனுமதி பத்திரத்தில் வழங்கப்பட்ட நிபந்தனைகளை மீறி வகைதொகையின்றி அதிகளவான கிரவல் அகழப்பட்டு குறித்த இடம் பாரிய ஒரு குளம் போன்ற நிலைமை நிலைமையை விட மோசமாக மாறி இருக்கின்றது. குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவை போன்று பல மடங்கு அகழப்பட்டும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் எதுவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவர்களின் அனுமதியில் ஒரு நாளுக்கு சுமார் பதினைந்து டிப்பர்களுக்கு அவர்களுக்கு அனுமதி இருந்தால் ஒரு நாளைக்கு அங்கு 200 டிப்பர் லோட் அளவில் அகழபடுவதாகவும் இவ்வாறு பாரிய அளவில் இடம்பெறும் அகழ்வால் தமது பகுதிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்திருக்கின்றனர்.

இவ்வாறான பின்னணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் கவனிக்காத நிலையில் குறித்த இடத்தில் நேற்றையதினம் (07) ஊடகவியலாளர் சென்று அந்த இடத்தில் செய்தி சேகரித்து ஒட்டிசுட்டான் காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களுக்கு தொடர்புகொண்டு தெரிவித்ததன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஒட்டிசுட்டான் காவல் நிலைய அதிகாரிகள் குறித்த இடத்தில் அவர்களுடைய அனுமதிப்பத்திரத்தை மீறி அகழ்வு இடம்பெற்றமையை அவதானித்து குறித்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பைக்கோ இயந்திரத்தையும் அதனது சாரதியையும் கைது செய்தனர்.

இவ்வாறான பின்னணியில் கைதுசெய்யப்பட்ட பைக்கோ இயந்திரத்தை கொண்டு செல்வதற்கு குறித்த தரப்பினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செய்து இருந்ததோடு குறித்த இடத்தில் எந்தவிதமான ஆவணங்களையும் அவர்கள் வைத்திருக்கவில்லை. காவற்துறையினர் ஆவணங்களை கோரிய போதும் ஆவணங்கள் வேறு இடத்தில் இருக்கின்றது என தெரிவித்து சுமார் ஒன்றரை மணி நேரங்களுக்கு மேலாக குறித்த இடத்தில் அந்த ஆவணங்கள் எடுத்து வந்து காண்பிக்கப்படவில்லை. இவ்வாறான பின்னணியில் இங்கு மிகவும் முறைகேடான சம்பவம் இடம்பெற்று இருக்கின்றது ஏன் இவர்கள் ஆவணம் காட்டவில்லை என்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற ஒட்டுசுட்டான் காவற்துறையினர் நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை அனுமதி வழங்கிய திணைக்களங்கள் ஏன் கண்காணிப்பு செய்யவில்லை குறித்த பகுதியில் ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன வனவள திணைக்களம் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதேவேளை புவிச்சரிதவியல் திணைக்களம் அவர்கள் வழங்கிய நிபந்தனைகளை பரிசீலித்து நடவடிக்கை மேகொள்ளவேண்டும் தனியார் காணியை முறைகேடாக கிரவல் அகழ்விற்கு வழங்கிய அதிகாரிகள் மீது மாவட்ட செயலகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அத்தோடு குறித்த இடத்தில் இடம்பெறும் அகழ்வு பணி தமக்கு பாரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறித்த இடத்தில் அகழ்வு பணியை நிறுத்துமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.