விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும்: ஜனாதிபதி

IMG 20220211 WA0026
IMG 20220211 WA0026

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்.

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படுகிறது.  எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல, மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும். இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில் நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர் வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும். எதிர் காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலை கழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும், அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் என்றார்.