முகக்கவசம் அணிவது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளரின் விசேட அறிவித்தல்!

asela
asela

முகக்கவசம் அணிய வேண்டிய மட்டத்திலேயே இலங்கை இன்னும் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் 60 முதல் 70 வயதிற்கு இடைப்பட்ட 65 சதவீதமானவர்கள் எந்தவொரு கொவிட் தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது 40 சதவீதமானவர்களுக்கே செயலூக்கி செலுத்தப்பட்டுள்ளது.

அது 75 முதல் 80 சதவீதத்தினை அடையும் போது, சில தளர்வுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உரிய வகையில் முகக்கவசம் உள்ளிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பொதுமக்களிடம் கோருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் நேற்றைய நாளில் 22 ஆயிரத்து 977 பேருக்கு, பைஃஸர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதாக, தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை, 64 இலட்சத்து 89 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், நேற்றைய தினம் 779 பேருக்கு பைஃஸர் முதலாம் தடுப்பூசியும், 799 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

ஆயிரத்து 632 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 2 ஆயிரத்து 28 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.