எதனை செய்ய வேண்டுமென்று வேறெந்த அரசாங்கமும் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க தேவையில்லை! – வெளிவிவகார செயலர்

jayanath
jayanath

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை மீது குற்றம் சுமத்தும் பல நாடுகள், கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கான இலங்கையின் தயார்ப்படுத்தல் குறித்து, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விளக்கமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை எதிர்வரும் 3ஆம் திகதி விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே, எதனையும் செயற்படுத்த வேண்டும் என எந்தவொரு அரசாங்கமும், இந்த அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க தேவைதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் ஆற்றப்படும் நல்ல விடயங்களை ஏற்று அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதையே அவர்கள் செய்ய வேண்டும்.

யுத்தம் காரணமாக, மாதமொன்றுக்கு அனைத்து இனங்களையும் சேர்ந்த சுமார் 250 உயிர்கள் பலியாகின.

ஆனால், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதியின் பின், ஏப்ரல் 21 தாக்குதலைத் தவிர்த்து, உயிர்கள் பலியான சந்தர்ப்பம் பூச்சியமாகும்.

மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாகும்.

இலங்கை மீது குற்றம் சுமத்தும் நாடுகளின் கடந்த இரண்டு தசாப்தகால செயற்பாடுகளைப் பார்த்தால், அவை மனித உரிமைகளை மீறி, வேறு நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாடுகளில் பெருமளவான உயிரிழப்புகளை ஏற்படுத்திய பல சந்தர்ப்பங்களைக் குறிப்பிட முடியும்.

இந்த நாட்டில், ஏதாவது முக்கியமான சில பிரச்சினைகள் இருக்குமாயின், நாட்டின் சமாதானத்திற்காக அது தொடர்பில் செயற்படுவோம்.

இந்த விடயத்தில், உரிய பிரதிபலனைப் பெற்றுக்கொள்ள தங்களுக்கு உதவுமாறு அனைத்து தரப்புகளிடமும் கூறுவதாக வெளிவிவகார செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.