எனக்கு அவமானங்கள் பழகி விட்டது-மைத்திரிபால

maithri 1
maithri 1

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒரே மேடைக்கு வர வேண்டிய தருணம் வந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”